Wednesday, January 13, 2016

My questions on Jallikattu

மிருகவதை?!
ஒரு மாட்டை சட்டப்படி என்னவெல்லாம் செய்யலாம்?
1. காயடிக்கலாம் - அதாவது எந்த மருத்துவ உபகரணமும் இல்லாம, மயக்கமருந்து குடுக்காம...
2. பின்னாடி சூடு வைக்கலாம்.. உரிமையாளர் முத்திரை
3. வண்டி இழுக்க வைக்கலாம்.. சாட்டை வச்சி அடிக்கலாம்.
4. மாடுகளின் தேவை
(பால்மடி வத்தி, பாலாறு மாதிரி ஆன பசு, ஊர்ல இருக்குற எல்லா சுமையையும் இழுத்து முடிச்சி தன் எடைய சுமக்கறதே கஷ்டம்-ன்னு சுத்துற எருது, ஊர்ல இருக்குற எல்லா பசுவையும் ஏறி முடிச்ச பொலிகாளை)
எல்லாம் முடிஞ்ச அப்புறம், கொன்னு திங்கலாம்.
இதெல்லாம் சட்டப்படி தப்பில்லை. ஆனால் சல்லிக்கட்டு மட்டும் தப்பு. மிருகவதை.
வீரம்?!
1. அந்த சூழல் எருதுக்கு விளையாட்டா? வதையா?
இன்னும் சரியா கேக்கணும்னா, மாடு மிரண்டு ஓடுதா? இல்ல, மூக்கணாங்கயிறு அறுத்த சந்தோசத்துல விளையாடுதா?
2. எல்லா மாடும் கண்டிப்பா விளையாட வாய்ப்பில்ல. பயந்து மிரண்டு போன மாட்ட களத்துக்கு உள்ள விடலாமா? கூடாதா? மெடிக்கல் டெஸ்ட் மாதிரி இதுக்கு ஏதாவது செக் பாயிண்ட் இருக்கா?
3. காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவ உதவி (பணம்) எப்படி? தன் சொந்த செலவா? உயிரை விட்ட வீரர்கள்? அவங்க குடும்பம்?
4. இந்த வீர விளையாட்டு, போர் இல்லாத அமைதி காலங்களில் முதல் ரத்தம் பார்த்துப் பழக ஒரு வாய்ப்பு-ன்னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். அப்டின்னா, இது போருக்கு இணையான ஒன்று. இறந்த போர் வீரர்களுக்கு கெடைக்கிற எல்லாமே, இறந்த மாடு பிடி வீரருக்கும் கெடைக்கணும் இல்ல?
5. கண்டிப்பாக நாட்டு மாட்டினம் காப்பாற்றப்படனும். சரியான இனவிருத்திக் காளையை அடையாளம் காட்ட, வேற எதுவும் வழிமுறையை காட்டுனா, அத எந்த அளவுக்கு ஏத்துக்குவீங்க?
ஒரு பக்கம், பால் அரசியல் பயமுறுத்தி பீட்டா-வை தூக்கி எரிய சொல்லுது. இன்னொரு பக்கம் வாடிவாசல் வீடியோ பாத்தா வயிறு கலங்குது..
தெளிவா எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்க முடியல.
விளக்கம் யார் வேணா குடுங்க..
‪#‎IsupportJallikattu‬ ‪#‎BanJallikattu‬ ‪#‎Notsurewhattodo‬

Wednesday, May 1, 2013

உழைப்பாளர் தினம்

இன்னைக்கு காலைல ஃப்ரண்டு வீட்டுக்கு பைக்ல போயிட்டிருக்கும் போது,
எங்கேயோ இருந்து வந்த ஒரு மஞ்சள் பட்டாம்பூச்சி, ஹெல்மெட்ல அடிபட்டு செத்துப்போயிடிச்சு.
அந்த மஞ்சள் நிறம் மட்டும் ஒரு கறை மாதிரி அப்டியே இருந்தது.
ஊர்ல வழக்கமா நடக்கும் ஒரு விசயம்தான். பட்டாம்பூச்சி, தும்பி, இன்னும் பெயர் தெரியாத பல பூச்சிகள். ஒரு தடவ வண்டு ஒண்ணு செருப்புக்குள்ள நுழைஞ்சு, முத்தம் கொடுத்ததுல கட்டை விரல் 2 நாள் வீங்கி.. விடுங்க, அத சொல்ல வரல.

பெங்களூர்ல இது தான் முதல் தடவ. இத்தனைக்கும் பெரு நகரங்களை எடுத்துகிட்டா இங்க மட்டும் தான் மரங்கள், பூங்கான்னு கொஞ்சம் பசுமையா இருக்குர ஊரு. இங்கயே பூச்சி இனங்களை பார்க்குரது ரொம்ப கம்மியா இருக்கு. கொசுவும், கரப்பானும் மட்டும்தான் எல்லா நகரங்களிலும் சுலபமா உயிர் வாழுது.

காரணம் ரொம்ப சிம்பிள். இவைகளும் நம்மள மாதிரி தான். தான் மட்டும் வாழ்ந்தா போதும்ன்னு நினைக்கிரது மட்டுமில்லாம, தனக்கு உணவு கொடுக்குற உயிரினங்களையே அழிக்கும் நன்றியுள்ள ஜீவராசிகள்.

இயற்கையோட உண்மையான உழைப்பாளர்களை கொன்னுட்டு, நாம உழைப்பாளர் தினம் கொண்டாடுரோம்.
வேடிக்கையான விஷயம் என்னன்னா, அந்த பூச்சி இனங்கள் எல்லாம் அத்தியாவசிய தேவைக்கு உழைக்கிற(உயிர் வாழ) ஜீவன்கள்.
நம்ம ஆடம்பரத்துக்கு உழைக்கிற ஆட்கள்.

இனிய உழைப்பாளர் தின நல்-வாழ்த்துக்கள்.

Friday, April 12, 2013

பூனைகளின் ஊர்


ஹாருகி முரகாமியின் சமீபத்திய நாவல் 1Q84 ல் வரும் ஒரு சிறு பகுதி இது. ஒரு நீண்ட இரயில் பயணத்தின் போது கதையின் நாயகன் டெங்கோ படிக்கும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறுகதைகளுள் ஒன்று, “பூனைகளின் ஊர்என்ற இந்தக் கதை. இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜெர்மானிய எழுத்தாளரால் எழுதப்பட்ட கதை என்பது தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறிப்பு. (ஆனால் இது ஹாருகி முரகாமி எழுதிய சிறுகதை தான்.) அதன் தமிழ் மொழிபெயர்ப்பை (என்னுடைய தமிழாக்கம்) இங்கு வெளியிடுகிறேன். ஹாருகி முரகாமி, கொஞ்சம் மாய யதார்த்தம் மற்றும் fantasy கலந்து எழுதுபவர் என்பதை அறிவது, இந்தக் கதையைப் படிக்க உங்களுக்கு உதவும்.
ஆங்கில வடிவத்தைப் படிக்க விரும்பினால் நாவல் வெளியிடப்படுவதற்கு சில நாட்கள் முன்பு, நியூயார்க்கர் இதழில் வெளியிடப்பட்ட நாவலின் ஒரு பகுதியில் உள்ளது.
-o0o-

கதையின் நாயகன் ஓர் இளைஞன். எப்போதும் தனியாகப் பயணித்துக் கொண்டிருப்பவன். அவனது பயணத்துக்கு இலக்கென்று எதுவும் இல்லை. மனம் போன போக்கில் இரயிலில் பயணம் செய்கையில், அவனது கவனத்தை ஏதாவதொரு வகையில் கவரும் நிலையத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு இறங்கி விடுவான். அந்த ஊரில் ஒரு விடுதியில் அறையெடுத்துக் கொண்டு, அவனுக்குப் பிடித்திருக்கும் வரை அந்த ஊரில் தங்குவான். போதுமென்று தோன்றியதும், மீண்டும் இரயிலேறி வேறிடம் தேடிச் செல்வான். அவன், தனது ஒவ்வொரு விடுமுறையையும் இவ்வாறு கழிப்பது வழக்கம்.
ஒரு நாள், இரயிலின் ஜன்னல் வழியே ஓர் அழகிய நதியைக் காண்கிறான். பசுமையான மலைத் தொடர் அந்த நதியின் கரையோரமாக நீள்கிறது. ஓரிடத்தில் நதியின் மேல் அமைந்த பழமையான கற்பாலத்தோடு ஓர் அழகிய சிற்றூரும் தென்படுகிறது. அந்த ஊரின் இரயில் நிலையத்தில் அவன் செல்லும் இரயில் நிற்கிறது. அவன் தனது பையுடன் இறங்குகிறான். வேறு எவரும் அந்த இரயில் நிலையத்தில் இறங்கவில்லை. அவன் இறங்கியதும் இரயில் கிளம்பிச் சென்றுவிடுகிறது.
அந்த இரயில் நிலையத்தில் பணியாளர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. மிகச் சிலரே அந்த இரயில் நிலையத்தைப் பயன்படுத்துவதால் அப்படி இருக்கக் கூடும். அவன் பாலத்தைக் கடந்து ஊருக்குள் நடக்கிறான். கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊர் மன்றம் எந்தச் சலனமும் இன்றி வெறுமையாக இருக்கிறது. அந்த ஊரின் ஒரே விடுதியின் வரவேற்பறையில் யாருமே இல்லை. அந்த ஊர் மொத்தமும் எல்லாவித மனிதத் தொடர்பும் அற்றதைப் போல் இருக்கிறது. ஒருவேளை ஊரார் அனைவரும் வேறு எங்காவது சென்று சிற்றுறக்கம் கொண்டிருக்கிறார்களோ? ஆனால், அப்போது காலை மணி பத்தரை தான், அதற்குள்ளாகவா ஓய்வெடுப்பதற்குச் சென்றிருப்பார்கள்? ஒருவேளை ஏதேனும் கெட்ட சம்பவம் நிகழ்ந்து அதனால் மக்கள் அந்த ஊரைக் கைவிட்டு வேறிடம் சென்று விட்டார்களா? எப்படியானாலும் அடுத்த இரயில் அந்த ஊர் வழியாக மறு நாள் காலையில் தான் செல்லும், அதனால் அன்று இரவை அவன் அங்கு கழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. நேரத்தைக் கடத்த அவன் ஊருக்குள் அங்குமிங்கும் திரிகிறான்.
உண்மையில் அது பூனைகளின் ஊர். மாலையில் சூரியன் மறையத் துவங்கியதும், பல பூனைகள் பாலத்தின் வழியே படையெடுத்து வருகின்றனபல நிறங்களிலும் வகைகளிலும் ஆன பூனைகள். சாதாரண பூனைகளை விட அவை உருவத்தில் பெரியனவாக இருக்கின்றன, ஆனாலும் அவை பூனைகள் தாம், அதில் சந்தேகம் இல்லை. இந்தக் காட்சிகளைக் காணும் இளைஞன் மிகுந்த அதிர்ச்சி அடைகிறான். ஊரின் நடுவில் உள்ள மணிக்கூண்டுக் கட்டிடத்திற்குள் சென்று உச்சியில் ஏறி ஒளிந்து கொள்கிறான். பூனைகள் கடைகளைத் திறந்தும், தங்களுக்கான பணியிடங்களில் அமர்ந்தும் தத்தமது அன்றாடப் பணிகளை ஆரம்பிக்கின்றன. விரைவில் மேலும் அதிக பூனைகள் பாலத்தைக் கடந்து ஊருக்குள் வந்து சேர்கின்றன. அவை கடைகளுக்குள் நுழைந்து தமக்குத் தேவையானவற்றை வாங்குகின்றன; ஊர் மன்றத்தில் கூடி நிர்வாக முடிவுகளை விவாதித்து எடுக்கின்றன. விடுதியின் உணவகத்தில் உணவருந்துகின்றன. உயிரோட்டமான பூனைப் பாடல்களைப் பாடியபடி ஊரின் மதுபானக் கடையில் பீர் அருந்துகின்றன. பூனைகளால் இருளிலும் நன்றாகப் பார்க்க முடியும் என்பதால் அவற்றுக்கு விளக்குகளோ வெளிச்சமோ எதுவும் தேவைப்படவில்லை. ஆனால் அன்றைய இரவில் முழு நிலவின் பெருங்கருணை ஊரை நிறைத்ததால் அந்த இளைஞனால் மணிக்கூண்டுக் கட்டிடத்தின் உச்சியிலிருந்தபடி பூனைகளின் ஒவ்வொரு செயலையும் நன்றாகப் பார்க்க முடிகிறது. விடியும் வேளை நெருங்குகையில் பூனைகள் தம் வேலைகளை முடித்து, கடைகளை மூடிவிட்டு பாலத்தின் வழியே ஊரை விட்டு வெளியேறுகின்றன.
சூரியன் உதித்த நேரத்தில் பூனைகள் அனைத்தும் சென்று விட்டிருந்தன. மீண்டும் ஊரில் யாருமற்ற வெறுமையே நிறைந்திருந்தது. அந்த இளைஞன் கீழிறங்கி வந்து விடுதியின் அறையொன்றைத் தேர்ந்தெடுத்து உறங்குகிறான். பசியெடுக்கும் போது விடுதியின் சமையலறையில் மீந்திருக்கும் ரொட்டிகளையும் மீனையும் உண்கிறான். இருட்டியதும், மீண்டும் மணிக்கூண்டுக் கட்டிடத்தின் உச்சியில் ஏறி ஒளிந்து கொண்டு, விடியும் வரை பூனைகளின் நடவடிக்கைகளைக் காண்கிறான். அந்த ஊரின் இரயில் நிலையத்தில் நண்பகலுக்கு முன்பாக ஒரு முறையும் பிறபகலில் ஒரு முறையும் இரயில் நின்று செல்கின்றன. அந்த நிலையத்தில் யாரும் இறங்குவதுமில்லை, ஏறுவதுமில்லை. என்றாலும் இரயில் சரியாக ஒரு நிமிடம் அந்த நிலையத்தில் நின்று செல்கின்றன. அவன் விரும்பியிருந்தால் அந்த இரயில்களில் ஒன்றில் ஏறி அந்த மர்மம் சூழ்ந்த பூனைகளின் ஊரை விட்டுச் சென்றிருக்கலாம். ஆனால், அவன் செல்லவில்லை. இளவயதிற்கே உரிய ஆர்வம் அவனிடம் நிறைந்திருக்கிறது. ஒரு சாகசத்திற்கு அவன் தயாராக இருக்கிறான். இந்தப் புதிர் மிக்க காட்சிகளை அவன் மேலும் காண விரும்புகிறான். முடிந்தால், அந்த இடம் பூனைகளின் ஊராக எப்படி, எப்போது மாறியது என்று அறிய விரும்புகிறான்.
அவன் வந்து சேர்ந்த பிறகு மூன்றாம் இரவில், அந்த மணிக்கூண்டுக் கட்டிடத்திற்கு வெளியே ஒரு சலசலப்பு எழுகிறது.
ஏய்! ஏதோ மனித வாடை அடிப்பது போல இருக்கிறதேஎன்று ஒரு பூனை சொல்கிறது.
நீ சொன்னதும் தான் எனக்கும் ஞாபகம் வருகிறது. கடந்த சில நாட்களாக ஏதொ விநோதமான மணம் வருவதை நானும் உணர்ந்தேன்.” மூக்கை சுளித்தபடி இன்னொரு பூனையும் அறிவிக்கிறது.
எனக்கும் தான்என்கிறது மற்றொரு பூனை.
மிகப் புதிராக இருக்கிறதே! இங்கு மனிதர்கள் யாரும் இருக்கக் கூடாதே
ஆம்! யாரும் இருக்க முடியாது. இந்தப் பூனைகளின் ஊருக்குள் ஒரு மனிதன் நுழைவதற்கு வாய்ப்பே இல்லையே!”
ஆனால் அந்த வாடை இருப்பதென்னவோ உண்மை தான்.”
பூனைகள் தமக்குள் குழுக்கள் அமைத்து, ஒரு தன்னார்வக் காவல் படையைப் போல் ஊரைத் தேடத் துவங்குகின்றன. மணிக்கூண்டுக் கட்டிடத்திலிருந்து தான் அந்த வாடை வருகிறது என்பதை அறிய அவற்றுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. பூனைகள், தம் மென்மையான பாதங்களால் படியேறி உச்சிக்கு வருவதை இளைஞனால் கேட்க முடிகிறது. ‘அவ்வளவு தான், என்னைக் கண்டுபிடித்து விட்டார்கள்என்று இளைஞன் நினைக்கிறான். அவனதுமனித வாடைபூனைகளுக்குக் கோபத்தைக் கிளப்பிவிட்டதாக அவன் அஞ்சுகிறான். அந்த ஊருக்குள் மனிதர்கள் கால்வைக்கவும் அனுமதிக்கப்படவில்லை. பூனைகளுக்கு கூர்மையான நகங்களும் வெண்மையான முன்கோரைப் பற்களும் உண்டு என்பதை அவன் அறிவான். தான் அங்கு கண்டுபிடிக்கப்பட்டால் தனக்கு என்ன நிகழப் போகிறதென்பது அவனுக்குத் தெரியவில்லை, ஆனாலும் தன்னை உயிருடன் ஊரை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டார்கள் என்று உறுதிபட நம்புகிறான்.
மூன்று பூனைகள் கட்டிடத்தின் உச்சியில் ஏறி, காற்றை நுகர்ந்து மோப்பம் பிடிக்கின்றன.
தன் மீசையை அசைத்தபடி ஒரு பூனை சொல்கிறது, “என்ன அதிசயம்! இங்கு ஒரு மனிதனின் வாடை இருப்பது உண்மை, ஆனால் மனிதன் யாரும் இல்லையே..”
ஆம், விந்தை தான். ஆனால், இங்கு யாரும் இல்லை. வாருங்கள், வேறு இடங்களில் போய்த் தேடுவோம்..” என்றது இன்னொரு பூனை.
பூனைகள் ஒன்றையொன்று பார்த்தபடி, குழப்பத்துடன் படிகளில் கீழிறங்கிச் செல்கின்றன. அந்தப் பூனைகளின் பாதங்களின் ஓசை, மெல்ல இருளுக்குள் கரைந்து மறைவதை அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். நிம்மதியின் பெருமூச்சொன்று அவனுள் எழுகிறது, ஆனாலும் சற்று முன் என்ன நடந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தப் பூனைகள் அவனைப் பார்க்காமல் இருந்திருக்கவே முடியாது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவனை அந்தப் பூனைகள் பார்க்கவில்லை. எப்படியாயினும் மறு நாள் பொழுது விடிந்ததும், இரயில் நிலையத்திற்குச் சென்று இரயிலில் ஏறி அந்த ஊரை விட்டுச் செல்ல முடிவு செய்கிறான். அவனது அதிர்ஷ்டம் தொடர்ந்து நீடிக்குமா என்று அவனுக்கே சந்தேகம் தான்!
மறுநாள் முற்பகல் அவன் இரயில் நிலையத்தில் காத்திருக்கிறான். ஆனால், இரயில் அங்கு நில்லாமல் சென்று விடுகிறது. வேகம் குறையாமல் அது இரயில் நிலையத்தைக் கடந்து செல்வதை அவன் பார்த்துக் கொண்டே நிற்கிறான். பிற்பகலின் இரயிலும் அவ்வாறே நிற்காமல் கடந்து செல்கிறது. இரயிலில் ஓட்டுனர் இருப்பதை அவனால் பார்க்க முடிகிறது. ஆனால், இரயில் நிற்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவன் அங்கு இரயிலுக்காகக் காத்து நிற்பதையே யாரும் பார்க்காதது போல் இருக்கிறது. அங்கே ஒரு இரயில் நிலையம் இருப்பதையே யாரும் பார்க்காதது போல். தண்டவாளங்களின் மேல் ஊர்ந்து பிற்பகல் இரயில் கடந்து சென்று மறைந்த பிறகு முன்னெப்பொழுதும் இல்லாத மௌனம் அந்த இடத்தின் மேல் கவிகிறது. சூரியன் மெதுவாக மறையத் துவங்குகிறான். இப்போது பூனைகள் வருவதற்கான நேரம். அந்த இளைஞன், தான் மீட்டெடுக்க இயலாதபடி தொலைந்து போனதை உணர்கிறான். இது பூனைகளின் ஊரல்ல என்பதை அவன் இறுதியாக அறிந்து கொள்கிறான். இது அவன் தொலைந்து போவதற்காகவே காத்திருந்த, அவன் தொலைந்து போக வேண்டிய இடம். இது, அவனுக்காகவே தயாரிக்கப்பட்ட, இன்னொரு உலகம். காலத்தின் இறுதி வரை, அவன் எங்கிருந்து வந்தானோ அந்த உலகத்துக்கு அவனை மீட்டுச் செல்ல எந்த இரயிலும் அந்த நிலையத்தில் இன்னொரு முறை நிற்கப்போவதேயில்லை