Thursday, September 15, 2011

கடவுளும் தூரமும்

யோவ்! உன்ன யாருய்யா அவ்ளோ தூரத்துல போய் உக்கார சொன்னது! பக்கத்துல இருந்திருந்தா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும் இல்ல!”

கடவுளைப் பார்த்து புலம்பிக்கொண்டே ஏறுகிறேன் வெள்ளியங்கிரி மலையில்.

நான்காம் மலையில் ஏறும்போது தொலைந்தே விட்டனர். எனக்கு முன்னே என்னுடைய மேனேஜர் சஜித், அவரது இளவல் மற்றுமொறு நண்பர் ஆனந்த் எல்லோரும்.
அனைவரும் வேகமாக சென்று கொண்டிருக்கையில், நான் மட்டும் மெதுவாக பின்னால்.
தனித்து விடப்பட்டபோது தான் இந்த புலம்பல் எல்லாம்.

காலில் எல்லா இடங்களிலும் சதைகள் தனது இருப்பை வலி மூலம் உணர்த்தின.

கொஞ்சம் குடிநீர், கொஞ்சம் தின்பண்டங்கள், சிறிய சால்வையுடன் மிகப்பெரிய மலையில் நான்.

மலை ஏறத் தூண்டிய அனைவருக்கும், பார பட்சமில்லாமல் அர்ச்சனை.
“பேசாம வீட்லயே இருந்திருக்கலாம், இவரு கூப்டாருன்னு வந்தது ரொம்ப பெரிய தப்ப போச்சு. உனக்கு வேணும்டா. சங்ககிரி(நான் பிறந்த மண்) மலை மாதிரிதான் இருக்கும்னு சொல்லி ஏமாத்தீடாங்க, படு பாவிங்க!”

ஆனால் உண்மை தான், சங்ககிரி மலை போலவே படி இல்லாமல், கூரான கற்களுடன், கரடு முரடாகவே, ஆனால் இது 4 மடங்கு உயரம் அதிகம் என்பதை மட்டும் மறைத்து விட்டனர்.

வழியில் ஒரு சின்ன சந்தேகம், அவர்கள் என்னை முந்திச் சென்று விட்டார்களா? அல்லது எனக்காக எங்கேயாவது காத்துக்கொண்டிருப்பதை அறியாமல் நான் முன்னே வந்து விட்டேனா?

இருக்கட்டும், ஏறுவோம் என்று தொடர்ந்து ஏறினேன்.

வழியில் ஒரு சிறுவன், 7 அல்லது 8 ஆம் வகுப்பு படிக்க வேண்டிய வயது.

“அண்ணே, தண்ணி இருக்கான்னே?”

“இந்தாங்க!”

இடையில் அலைபேசியை எடுத்தேன் நேரம் பார்க்க,

அதில் இருந்த “wallpaper” ஐப் பார்த்து விட்டு கேட்டான்,

” அண்ணா பல்சர் தானே? உங்களுதா? எப்போ வாங்குனீங்க? எவ்ளோன்னே?” இன்னும் பல.

அவன் விசாரணையின் இடையில் என் குறுக்கு விசாரணையில் தெரிந்து கொண்ட விஷயங்கள் கீழே,

தான் ஒரு பட்டறையில் வேலை செய்வதாகவும், தன்னுடன் வந்தவர்களை விட்டுவிட்டு அவன் (இவனும்:@) முன்னே ஏறிக் கொண்டிருப்பதாகவும் கூறினான்.

அவனுக்கு பல்சர் மேல் மிகுந்த ஈடுபாடு எனவும், எப்போதெல்லாம் பல்சர் வண்டிகள் வந்தாலும் தானே “வாட்டர் வாஷ்” செய்வேன் என்றும் கூறினான்.

அனைத்தையும் விட ஒரு புதிய பல்சர் வாங்குவதே தன் ஆசை என்றும் கூறினான்.

ஆனால் அவன் Supervisor , ” அது எப்படின்னு சொல்லு தம்பி, 12 வருஷம் வேல செஞ்சு அப்புறம் தான் எனக்கு இப்போ 8000 சம்பளம் வருது, ஆனா இப்போ கூட குடும்பத்துக்கு தான் சரியா இருக்கு. நம்ம வருமானத்துக்கு செகண்ட் ஹான்ட்ல ஏதாவது வாங்குறது தான் சரியா வரும்.”

இந்த வார்த்தைகள் அவனை நிறையவே உசுப்பேற்றிவிட பல்சர் வாங்குவதை தன் கனவாகவே வைத்திருந்தான்.

ஆனால் நானோ, வார இறுதியில் மட்டும் உபயோகித்துக்கொண்டு. ஆம்! மிகுந்த பிரயத்தனங்களுக்கு பிறகு வாங்கினாலும், என்னுடன் வைத்துக்கொள்ள என் அம்மா அனுமதிக்கவில்லை,
“அந்த ஊர்ல எல்லாம் டிராபிக் அதிகம் கண்ணு!. தினம் பயந்து கிட்டே இருக்கணும், நீ வண்டி எடுத்துட்டு போனா”

பல்சர்.

அவனுக்கு அது வாழ்நாள் கனவு,

எனக்கு வார இறுதியில் பொழுதுபோக்கு.

சற்று நேரத்தில் அவனும் சென்று விட, மீண்டும் தனியாய்,

ஒரு வழியாக என்னுடன் வந்த அனைவரையும் பிடித்து விட்டேன்,

5 ஆவது மலையில் அவர்கள் குளித்து விட்டு வந்ததால் நான் மட்டும் முன்னே வந்து விட்டேன்.

அனைவரும் தரிசனம் முடிந்த உடன் சூரிய உதயம் பார்க்கவென்று கிடைத்த இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ள,

3 மணிக்கு மலை உச்சியை அடைந்த எங்களுக்கு எந்த இடமும் அகப்படவில்லை. கடைசியில் ஒரு சிறிய பாறை, அதை ஒட்டி சிறிது இடம். அப்படியே நெருக்கி அமர்ந்து கொண்டோம். குளிர் மேலும் வாட்ட, ஏறி வந்த களைப்பில் அப்படியே மண்ணில் படுத்து உறங்கவும் செய்தோம்.

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு அரசு பேருந்தில் நானும், சஜித்தும் ஓசூர் வரை சென்றோம்.

“எப்படி விஜய், இந்த பஸ்ல எல்லாம் போறீங்க? முதுகு ரொம்ப வலிக்குது, அதுவும் long journey” 1 மணி நேரமே என்றாலும், அவருக்கு அந்த பயணம், மிகவும் சிரமம்,

நான் இப்போதுதான் முதல் தலைமுறை. எங்கள் சுற்றத்திலேயே கல்லூரி முடித்து, படிக்கும் போதே வேலை கிடைத்த விஷயத்தை அனைவரும் ஒன்று கூடும் விசேச நாட்களில் வியந்து கொண்டு இருக்கும் ஒரு குடும்பப்பின்னணி. ஆனால் அவர் அப்படியில்லை.

எனக்கு இது போன்ற பயணங்கள் சாதாரணம். அவருக்குத் தான் அது ரணம்.

ஆனால் இன்று, என்னுடன், மண்ணில் படுத்து உறங்கிக் கொண்டு இருப்பவர், அவரே தான்.

உறக்கம் வராத இரவில் தேவை இல்லாத சிந்தனைகளை தவிர்க்கவே முடிவதில்லை.

தன் வாழ்நாள் கனவாக ஒரு வண்டியை வைத்திருக்கும் பட்டறைச் சிறுவனும்,

அதே வண்டியை வார இறுதியில் மட்டும் உபயோகிக்கும் நானும்,
ஒரே பாதையில் வெறும் காலில் நடந்து கொண்டு…

இதன் பெயர் தான் சமத்துவமோ!

முதல் தலைமுறையாக சற்று வசதியையும், சோம்பேறித்தனத்தையும் அனுபவிக்கும் நானும்,
பிறந்ததில் இருந்தே comfortable என்னும் நிலையை தாண்டியிராத சஜித்தும்,
ஒரே மண் தரையில்.

மீண்டும் சமத்துவம்.

கருவறையைக் களைந்து வெளிய வந்தது முதல், கல்லறைக்குள் சென்று அடக்கமாகும் வரை எங்கேயும் கிடைக்காத சமத்துவம்.
இங்கே கருவறையின் அருகில்.

இதையே தான், மெக்கா யாத்திரையும், சபரிமலை பெருவழிப் பயணமும், பழனி பாதயாத்திரையும் உணர்த்துகிறதோ?

இருந்தும் கூட ஏன் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்?

இது ஒரு வேலை காரணமாக இருக்கலாம்,

மெக்கா கடல் கடந்து, மலை கடந்து செல்லும் தூரம்,
சபரி மலை எங்கள் ஊரில் இருந்து 350KM.
அருகில் இருப்பதாக கூறப்படும் பழனியே 120 KM.

இதெல்லாம் யோசிக்கும்போது தான் மீண்டும் தோன்றியது,

“யோவ்! உன்ன யாருய்யா அவ்ளோ தூரத்துல போய் உக்கார சொன்னது! பக்கத்துல இருந்திருந்தா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும் இல்ல!

No comments:

Post a Comment