Tuesday, December 27, 2011

ரசனை

சில நாட்களுக்கு முன் எதேச்சையாக (அதிசயமாக), தோழியுடன் புத்தகங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தேன்.
பேச்சு பொன்னியின் செல்வனில் வந்து நின்று தொலைத்தது.

"ஹேய், நீ பொன்னியின் செல்வன் படிச்சிருக்கியாடீ"

"இல்லை, ஆனா எங்க அப்பா வச்சிருக்காரு. நீ ஏன்டா வயசானவங்க படிக்கறதெல்லாம் படிக்கிற?"

"நானும், ஆரம்பத்துல அப்டிதான் நினைச்சேன். முதல் பாகம், படிக்க ஆரம்பிச்சதுதான் தெரியும். காலேஜ் லைப்ரரில பழியா கிடந்து 5 பாகமும் படிச்சு முடிக்கிற வரைக்கும் அதே நெனப்புதான்"

"5 பார்டா?! போடா டேய். ரொம்ப போரு! உன்ன மாதிரியே:P அப்புடி என்னதான் இருக்கும் 5 பார்ட்லயும். அது என்ன ஹாரி பார்ட்டர் மாதிரியா?"

"ம்ஹும், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி. உன்ன மாதிரி ஒரு வில்லி (நந்தினி). அவ கிட்டயும், அவ கும்பல் கிட்டயும் இருந்து சோழ மன்னர் குடும்பம் தப்பிச்சுதா? இல்லையாங்கறதுதான் கதை. ஒன்னு இல்ல, 2 ஹீரோ. ஒன்னும் பண்ண முடியாது அவ முன்னாடி. அவ்ளோ கெத்து அவ. படிச்சுதான் பாரேன்"

இப்படியாக உசுப்பேற்றியவுடன் முதல் இரண்டு அத்தியாயங்கள் மட்டும் படித்து விட்டு,

"டேய்! போடா வெண்ண!! #%#&#^&^# உன்ன மாதிரியே இருக்கு உன் டேஸ்டும்!"
"ஐயே! கழுதைக்கு கற்பூர வாசனையும் தெரியாது! பன்னிக்கு பாண்ட்ஸ் பவுடர் வாசனையும் தெரியாது!" என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன். பின்ன நேர்ல சொன்னா அவ்ளோதான்.
********************************************************************************************************************************
கல்லூரி இரண்டாமாண்டில் ஒரு ஆகஸ்ட் மாதம். "சிவாஜி" முதல் நாளே இரண்டாம் காட்சி பார்க்க, நண்பர்கள் சகிதம் சென்றிருந்தோம். ரசிகர் மன்ற நுழைவுச் சீட்டைக் கொடுத்து திரையரங்க இசைவு சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நாங்கள் இருந்த பொது, முதல் காட்சி முடிந்து தொலைத்தது. வெளியே, ஒரு ஆரவாரமும் இல்லாமல், இருண்ட முகங்களோடு மக்கள்.

"ஐயையோ! ஷங்கர் இதுல இந்தியாவோட சேர்த்து பாகிஸ்தான், இலங்கை, நேபாள்ன்னு எல்லா நாட்டையும் வல்லரசு ஆக்கிட்டாரோன்னு ஒரு பயம் வந்திருச்சி."

"அண்ணே! படம் எப்புடின்னே?" என்று வந்த ஒருவரின் வாயைக் கிண்டினேன்.
ஒரு நிமிடம் இஞ்சியைக் கடித்த நம் மூதாதையர் போல விழித்தவர், சற்றே சுதாரித்து, "ஜூப்பரு தம்பி! தலைவரு பட்டாசு கிளப்பீட்டாறு!" என்றார். உள்ளே நான் எதிர் பார்த்த அதே தான். முதல் பாதியில் செமையாக கடித்து குதறி விட்டிருந்தார் ஷங்கர்.

இடைவேளையில், நிறைய வாக்குவாதங்கள். முத்தாய்ப்பாக, யாரோ ஒருவன் சொன்னான்.
"இப்போதான்டா, முட்டைல கரு உருவாகிற ஸ்டேஜுல கதை இருக்கு. இனிமேதான் சூடு பிடிக்கும்"
"அப்போ! பேசாம குஞ்சு பொரிச்ச அப்புறமாவே வரலாம். வாங்கடா இப்போ வூட்டுக்கு போலாம்"

இதைக் கேட்ட நண்பனு(கிரி)க்கு கடுப்பேறிவிட்டது.
"டேய்! உனக்கு புடிக்கலன்னா உன்னோட வச்சிக்கோ! ஏதாவது எகத்தாளம் பேசுன, அப்புறம் __________. அப்புடி என்னடா பெரிய டேஸ்டு உனக்கு"

*******************************************************************************************************************************
ரசனை - இந்தச்சொல் ரசிக்க வேண்டிய தருணங்களை ரகளையாக்கி விடுகின்றது.

எனக்கு மணிரத்னம், மகேந்திரன் & சுஜாதா படைப்புகள் விருப்பம். எனவே என்னுடையது உயர்ந்த ரசனை.
உனக்கு _______, _______ மற்றும் _____(யார் பெயரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்க) படைப்புகள் விருப்பம். உன்னுடைய ரசனை கேவலமான ரசனை.
இப்படியான வாக்கு வாதங்கள் சரியா?

ஒருவனுடைய, ஒருத்தியுடைய ரசனையை எது தீர்மானிக்கிறது?
யாரவது கூற இயலுமா?

"Any intelligent fool can make things bigger, more complex, and more violent. It takes a touch of genius -- and a lot of courage -- to move in the opposite direction."
ஒரு புத்திசாலித்தனமான முட்டாளால், எந்த ஒரு பொருளையும், இன்னும் பெரிதாக, உணர்வதற்கு சிக்கலாகவே செய்ய முடியும். ஒரு மேதாவியால் மட்டுமே அதற்கு எதிர்மறையாக (எளிமையாக) செய்ய இயலும்.
- ஐன்ஸ்டீன்.


இதைச் சொன்னவர் உலகத்தின் மிக முக்கியமான அறிவியல் விஞ்ஞானிகளுள் ஒருவர்.

ஒவ்வொரு படைப்பாளியும், தன் படைப்பிற்கு ஆசிரியன் தானே? வகுப்பில் முதல் 10 மதிப்பெண் வாங்கும் மாணவ, மாணவியர்க்கு மட்டும் புரியும்/பிடிக்கும் வகையில் பாடம் நடத்தும் ஆசிரியர், மாநிலத்திலேயே முதன்மையான மாணவனை உருவாக முடியுமே தவிர, ஒரு போதும் சிறந்த ஆசிரியர் ஆக முடியாது.
ஒப்புக் கொள்கிறீர்களா?

ஒரு படைப்பாளி தன் படைப்பை அனைவரின் முன் வைக்கும்போது அது அனைவருக்குமான எளிய வழியில் தானே இருக்க வேண்டும். தனக்கு/தன்னைப் போன்றவர்களுக்கு மட்டும் புரியும்/பிடிக்கும் வகையில் ஒரு படைப்பை உருவாக்கினால், அது அவன் இயலாமையே தவிர, வேறு என்ன?
(உதாரணம்: ஆய்த எழுத்து பிடிக்காதவர்களுக்கும்/புரியாதவர்களுக்கும், விருமாண்டி பிடித்திருந்தது/புரிந்தது.)

E=mc2 இந்த விளக்கத்தை என்னுடைய, மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியரை விட எளிமையாகக் கூறி விளக்க முடியவில்லை எனில், அவன் நோபல் பரிசு வென்றாலுமே, அதனால் என்ன உபயோகம்? அவன் எழுதிய புத்தகத்திற்கும், அகராதிக்கும் என்ன வித்தியாசம்?

படித்தவர்களின் ரசனை தங்களின் புத்திக்கூர்மையை வெளிப்படுத்தலாமே தவிர, அது தான் உயர்ந்த ரசனை என்று கூற முடியுமா? அப்படியே கூறுவது அவர்களின் அறியாமையே தவிர வேறு என்ன?

மொக்கைடா! என்பதைப் போல, கிளாசுடா! என்பதும் அவரவர் ரசனையைப் பொருத்தது dhaane

********************************************************************************************************************************
சமீபத்தில் வேலாயுதம் சென்றிருந்தேன், என் அக்கா, அண்ணன் மற்றும் தங்கையுடன்.

என் தங்கை விஜய் ரசிகை.
படம் முடிந்தவுடன் ஹோட்டலில் சாப்பிடும்போது, "இது ஒரு படம்னு இதுக்கு வந்ததுக்கு, வீட்டுலதான் இவரு நடிச்ச பழைய படம்லாம் இருக்கே, அந்த படத்துல கொஞ்சம், இந்த படத்துல கொஞ்சம்னு பாத்துட்டு இருந்திருக்கலாம். பெங்களூர்ல தான் வெளில சாபிடுறேன், இங்கயாவது வீட்டுல சாப்டுட்டு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா!"

"டேய்! வாயை மூடு! 2:30 மணி நேரம் போனதே தெரிலதானே. சிரிச்சிட்டு தானே இருந்த! வேற என்ன வேணும்! வித்தியாசமா படம் எடுத்து ஆஸ்கார் வாங்குறது மட்டும் தான் படமா?" என்றாள்.

********************************************************************************************************************************
சரி, என்னதான்டா சொல்ல வர்ற!

சிகப்பைப் போல, நீலமும் ஒரு வண்ணம் தான். வெள்ளையை விரும்பவதே சிறந்த ரசனை என்பதும், கருப்பை விரும்பி அணிவது கேவலமான ரசனை என்பதும் நம் அறியாமை.

அந்த முட்டாள்தனத்தை இனி செய்யப்போவதுமில்லை. இனிமேல் ______, __________, _______ மற்றும் ______ ரசிகர்களை கிண்டல் செய்யப்போவதுமில்லை.

No comments:

Post a Comment