Saturday, April 14, 2012

கனவுகளின் மரணம்..

இதோ லக்ஷ்மி மில் ஜன்க்ஷன்.. வண்டி சத்தம், கோயம்புத்தூர் இரைச்சல் எதுவுமே காதுல விழவே இல்ல. இங்க தான் கொஞ்ச நேரம் முன்னாடி ரோடு கிராஸ் பண்ண நின்னுட்டு இருந்தேன். கடைசியா நான் பார்த்தது ஒரு ப்ளூ பல்சர். அது தான் என்ன இடிச்சுது. நான் தடுமாறி கீழ விழுந்தது, அப்புறம் அந்த பல்சரும் என் மேலேயே விழுந்ததும், பின் மண்டையில செம வலி.
*****************************************************************************
“செரிபெல்லம் எங்க இருக்கு தெரியுமா? பின்னந்தலையில இருக்கு. அதுக்கு பேரு தான் சிறு மூளை. அது தான் உடல் உறுப்பு எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ணுது. அது இல்லன்னா, நம்மளால கை தூக்க முடியாது, நடக்க முடியாது, கோமால இருக்க வேண்டியதுதான். சினிமால கூட பார்த்து இருப்பீங்களே! கட்டை எடுத்து பின்னந்தலையில அடிச்ச உடனே ஆள் மயக்கம் போட்டு விழுந்துடுவான். அப்புறம் எந்திரிச்சு பார்க்கும் போது கட்டி போட்டு வச்சிருப்பாங்க.”
- ரங்கநாயகி மிஸ் பாடம் நடத்துனது இது. இப்போ ஞாபகம் வந்தது ஒரு வகைல நல்லதா போச்சு. நான் கோமால தான் இருக்கேன். இன்னும் ஒன்னும் ஆகல. கண் முழிச்ச உடனே, அம்மாவுக்கு போன் பண்ணி, CTSல செலக்ட் ஆயிட்டேன்ன்னு சொல்லணும், ஆக்சிடென்ட் ஆனது அப்புறமா தான் சொல்ல போறேன்.
*****************************************************************************
“Wish you all the very best daa! God bless you! Come with a good news”
என் தம்பி மெசேஜ். நான் செலக்ட் ஆகறதுல என்ன விட அவனுக்கு தான் ரொம்ப சந்தோசம். ஒவ்வொரு ரவுண்ட் முடியும் போதும் போன் பண்ணி சொல்லீட்டே இருக்கணும், என்ன ஆச்சுன்னு. இல்லன்னா, அவனுக்கு சும்மா இருக்க முடியாது!
“டேய் என்ன ஆச்சு!”
“எல்லாம் ஒழுங்காதான் நடந்துச்சு! இன்னும் ரிசல்ட் சொல்லல. கொஞ்ச நாள் கழிச்சு மெயில் பண்ணுவாங்க!”
“டேய் உண்மைய சொல்லு! செலக் ஆயிட்டதானே?”
“இன்னும் ரிசல்ட் சொல்லலடா வெண்ண! சும்மா நோண்டிகிட்டே இருக்காத! வந்து சொல்றேன்”
“ஏன்டா நாய் மாதிரி கொரைச்சிட்டே இருக்க! இரு அம்மாகிட்ட தரேன்.”
“என்ன ஆச்சு கண்ணு, இன்னும் ரிசல்ட் சொல்லவே இல்லையா?”
“இல்லம்மா! மெயில் அனுப்புவாங்க! இன்னும் ரெண்டு நாள்ல.”
“எல்லாம் நல்லபடியா பதில் சொன்னியா?”
“அதெல்லாம் ஒன்னும் சொதப்பவே இல்ல. பாத்துக்கலாம்.”
அப்போவே சொல்லி இருக்கணும். நேர்ல சொல்லலாம்னு இருந்தது தப்பா போச்சு. அதுக்குள்ள இப்படி நடந்து!
*****************************************************************************
“Congragulations guys, You all have made it. Welcome to Cognizant. We will inform you about the joining date through mail. Just wait for few more days”
ரேஷ்மி சொன்னது, இன்னும் கேட்டுட்டே இருக்கு, அங்க இருந்து வரும் போது தான் வண்டில விழுந்து இப்டி இருக்கேன். இதோ இப்போ தான் வேலை கிடைச்சுது. ஒரு மணி நேரம் கூட ஆகல. ரொம்ப நாள் கனவு இது. எனக்கு மட்டும் இல்ல. என் குடும்பத்துக்கே,
*****************************************************************************
என் தம்பி விஜய். அவனுக்கு பயோ-டெக் படிக்க ரொம்ப ஆசை.
“நான் உன்ன மாதிரி வேலைக்கு எல்லாம் போக மாட்டேன். நான் ஒரு விஞ்ஞானி. ஜெனிடிக்ஸ்ல ரிசர்ச் பண்ண போறேன். இந்த வாழைப்பழத்து மேல சுத்துமே ஒரு பூச்சி. அதால, வயச தள்ளி போட முடியும் தெரியுமா? அந்த பூச்சியோட டி.என்.ஏ-வ எடுத்து மனுசனுக்கு கொடுத்தா அவனால ரொம்ப நாள் உயிரோட இருக்க முடியும்ன்னு இப்போ கண்டு புடிச்சி இருக்காங்க. ஆனா எல்லாம் தியரிலையே நிக்குது. நான்தான் முடிக்க போறேன். என் படம் போட்டு பசங்க எல்லாம் பாடம் படிப்பாங்க. அப்புறம் இவன் தான் என் தம்பி! இவன் தான் என் தம்பி! இவன் தான் என் தம்பி! ன்னு எல்லார் கிட்டயும் நீ சொல்லீட்டு இருக்க போற!”
“அந்த பூச்சி பேரு என்ன?”
“-----, இருடா யோசிச்சி சொல்றேன்.“
“வெண்ண! அது பேரு ட்ராசோபில்லா! இது கூட ஞாபகம் வச்சிக்க முடியல! நீயெல்லாம்!”
*****************************************************************************
என்ன சொன்னாலும் சரி! இது அவன் கனவு, நான் கண்டிப்பா அவனுக்கு என்ன வேணுமோ அத செஞ்சி கொடுக்கணும். என தம்பிங்கரதால இல்ல. எனக்கும் இதே பயோ-டெக் மேலதான் ஆசை,
ஆனா சீக்கிரம் வேலை கெடைக்கனும்னு காலேஜ்ல கம்ப்யூட்டர் டெக்னாலஜி சேர்த்து விட்டுட்டாங்க. அதனால, என் கனவும் சேர்த்து இப்போ அவன் தலைல.

“Yes! Raja now forget all these formal things. Tell me what’s your childhood dream?
I wanted to become a Doctor! That too don’t like to be an usual Doctor. I wanted to be a scientist.
Then why did you came here?
That’s because of my family situation! My family wants me to get into a job sooner! So they foreced me to select CT. First i would like to fulfil my family’s dreams, then will go for mine.
Is it? They forced you? Any how all the best for your dreams. Work well and find a way to pursue your dreams, side by side.”
இது தான் HR ரவுண்ட்ல நடந்தது. அவரு பேரும் “ராஜ்”. ராஜாவுக்கும் ராஜ்க்கும் என்ன பெரிய வித்தியாசம்? சொல்லுங்க. அது தான் என்ன செலக்ட் பண்ணீட்டாரு போல!
*****************************************************************************
“கண்ணு நீ மொத பையன்டா! உனக்கு உன் தம்பிய விட பொறுப்பு அதிகம். நீ தான் சீக்கிரம் வேலைக்கு போகணும். அந்த மனுசன நம்பி ஒரு பிரயோஜனமும் இல்ல. நீ தான் அவனையும் படிக்க வைக்கணும். எல்லா சுமையும் உன் மேலதான். உனக்கே தெரியும், நான் சொல்லனும்னு இல்ல.”
இப்டி எங்க அம்மா ஆரம்பிச்சா அவ்ளோதான், விடிய விடிய போயிட்டே இருக்கும். ஆனா அவங்க மேலயும் தப்பு சொல்ல முடியாது. இதோ போன பிப்ரவரியோட 42 வயசு ஆகுது, இத்தன வருசத்துக்கும் சேர்த்து ரெண்டே ரெண்டு பட்டு தான் எங்க அம்மா கிட்ட இருக்கு. ஆனா இதுவரைக்கும் என்கிட்டயோ, இல்ல என் தம்பிகிட்டயோ, இதப் பத்தி குறைபட்டதே இல்ல.
*****************************************************************************
“ஏம்மா! நீ பட்டு புடவையே வாங்க மாட்டியா?”
“இப்போ எதுக்குடா அதெல்லாம், கொண்டு போன காசுக்கு, பட்டு புடவ யாரு உங்க தாத்தாவா கொடுப்பான்?”
நான் வேலைக்கு போயிட்டு, ஒவ்வொரு மாசமும் பட்டு புடவையே வாங்கி தரணும். என் தம்பிய வேலைக்கு போக விடவே கூடாது. அவன் நினைச்ச மாதிரியே, படிக்க வச்சி, ரிசர்ச்லயே இருக்கட்டும். நோபல் ப்ரைஸ் வாங்கட்டும். ஏன்! பெரிதுவகை ஈன்றவர்களுக்கு மட்டும் தான் இருக்கணுமா? அண்ணனுக்கு இருக்கக் கூடாதா?
இப்டி எல்லாம் யோசிச்சிட்டு வரும்போது தான், வந்து வண்டில விழுந்துட்டேன். பாவம், அந்த பையன புடிச்சி எல்லாரும் அடிக்கிறாங்க!
“யோவ்! விடுங்கய்யா! அது அவன் தப்பு இல்ல. நான் தான் வண்டி வந்தத கவனிக்கல!”
கத்தணும் போல இருக்கு. ஆனா முடியல. இன்னும் கொஞ்ச நேரம், எப்டியும், அந்த பையன, என் கூட ஆம்புலன்ஸ்-ல அனுப்புவாங்க. அவன் கிட்ட சாரி கேக்கணும்.
*****************************************************************************
இதோ போலிஸ் வந்திருச்சு.
“அண்ணே! கூட்டத்த விலக்குங்க! அந்த பையன புடிச்சு இங்க கொண்டு வாங்க!”
இன்ஸ்பெக்டர் போல!
“டேய் எப்டி ஆச்சு?”
“சார்! நான் ஒழுங்காதான் சார் வந்தேன். ப்ரீ லேப்ட்ன்னு திரும்புனா, இந்த பையன் நடு ரோட்ல வந்துட்டு இருக்கான். அவன் மேல விட்டு, அப்டியே ஸ்லிப் ஆயிடிச்சு”
“என்ன ஆச்சுன்னே! உயிர் இருக்கா?”
“ஸ்பாட் அவுட்டு சார், பிளாட்பாரத்துல தலை இடிச்சி, பின் மண்டைல நல்ல அடி போல!
“சரி மார்க் போடுங்க! யோவ், ரெண்டு கல் எடுத்து வைங்கயா! நம்ம தாலியறுக்கரதுக்கே வரானுங்க! எவளாவது ரோட்ல வந்தா போதும், அவள பார்த்துட்டே வர்றது. ரோட்ல என்ன போகுது, வருதுன்னு பார்க்கிறது இல்ல.”

*****************************************************************************

சில மரணங்கள் நதியோட்டத்தில் அடித்துச் செல்லும் கூழாங்கல் போல, நினைவில் தங்குவதேயில்லை.
சில மரணங்கள் பாறாங்கற்களைப் போல, மனம் விட்டு அகல்வதே இல்லை.

ஒவ்வொரு மனிதனின் இறப்பிற்கு சில நொடிகள் முன்னமேனும், அவன்/ள் கண்ட கனவுகள் பாறாங்கல்லாய் மாறி தன் நெஞ்சை நசுக்காமல் விடுவதில்லை..

1 comment:

  1. கனவுகள் -- ஒவ்வொரு மனிதனின் இறப்பிற்கு சில நொடிகள் முன்னமேனும், அவன்/ள் கண்ட கனவுகள் பாறாங்கல்லாய் மாறி தன் நெஞ்சை நசுக்காமல் விடுவதில்லை.. !!

    ReplyDelete